பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

மதுரவாயலில் விபசார தடுப்பு பிரிவு போலீஸ் என கூறி பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-29 22:45 GMT
பூந்தமல்லி,

போரூரை அடுத்த அய்யப்பன் தாங்கல் பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வரும் 52 வயது பெண்ணிடம் தீனதயாளன்(39), என்பவர் தன்னை வக்கீல் என்று கூறி அறிமுகமானார்.

பின்னர் அவர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். இதில் அவர்களின் பழக்கம் நெருக்கமானதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நாள் இரவு தீனதயாளன் அந்த பெண் வீட்டுக்கு சென்று அவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் தங்களை விபசார தடுப்பு பிரிவு போலீசார் என்று கூறி மிரட்டினர். பின்னர் அரைகுறை ஆடைகளுடன் இருந்த அந்த பெண்ணை அவர்கள் புகைப்படம் எடுத்தாக தெரிகிறது. மேலும் அவரிடம் இருந்து 12 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை பறித்து கொண்டு, சென்று விட்டனர்.

அதன் பின்னர் அடிக்கடி அந்த பெண்ணுக்கு போன் செய்து வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.5 லட்சம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.

இதையடுத்து அவர் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இதற்கு தீனதயாளன் தான் மூளையாக செயல்பட்டார் என தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 4 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நந்தினி மற்றும் ராஜா(29), அசோக் விக்டர்(32), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் முக்கிய குற்றவாளிகளான தீனதயாளன், ஏழுமலை ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் சூர்யா(26), என்பவரை 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து பனியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்மில்லர் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தார்.

இதில் அவர்கள் இருவரும், விபசார தடுப்பு போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த தீனதயாளன், ஏழுமலை(24), என்பது தெரியவந்தது. மேலும் தீனதயாளன் போலி வக்கீல் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்