மாவட்டத்தில் 7 தாசில்தார் அலுவலகங்களிலும் ஜமாபந்தி தொடங்கியது நாமக்கல்லில் கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தாசில்தார் அலுவலகங்களிலும் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. நாமக்கல்லில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் ஆசியா மரியம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

Update: 2018-05-29 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தாசில்தார் அலுவலகங்களிலும் நேற்று இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி தொடங்கியது. நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி செல்லப்பம்பட்டி, களங்கானி, ஏளூர், தாளம்பாடி, தத்தாத்திரிபுரம், கரடிப்பட்டி, உடுப்பம், மின்னாம்பள்ளி, பாப்பிநாயக்கன்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் பட்டா மாறுதல், முதியோர்் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 47 மனுக்களை பெற்றுக்கொண்டார். அந்த மனுக்களின் மீது ஜமாபந்தி முடிவதற்குள் நடவடிக்கை எடுத்து, தீர்வு காணுமாறு அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள கிராம புலப்பட நகல் பதிவேடு, விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை வழங்கப்பட்ட நிலங்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பிறப்பு-இறப்பு பதிவேடுகள், நிலவரி வசூல் பதிவேடு உள்ளிட்ட 24 வகையான பதிவேடுகளை தனித்தனியே பார்வையிட்டு சரிபார்த்தார்.

மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால், அதுகுறித்து உடனடியாக தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். இன்று (புதன்கிழமை) லக்கபுரம், ஏ.கே.சமுத்திரம், பாச்சல், கல்யாணி, ஆர்.புளியம்பட்டி, நவணி, கதிராநல்லூர், தாத்தையங்கார்பட்டி, கண்ணூர்பட்டி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடக்கிறது.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ராகவேந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், தாசில்தார் செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வராஜ், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (நீதியியல்) ராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி தலைமையிலும், கொல்லிமலை தாசில்தார் அலுவலகத்தில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் தலைமையிலும், சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் பர்ஹத் பேகம் தலைமையிலும் ஜமாபந்தி தொடங்கியது.

ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கண்ணன் தலைமையிலும், குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன் தலைமையிலும், பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் துரை தலைமையிலும் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. இதில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். 

மேலும் செய்திகள்