பத்திரிகையாளர் கவுரி லங்கேசை சுட்டுக்கொன்ற வழக்கு: 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

கவுரி லங்கேசை சுட்டுக்கொன்ற வழக்கில் 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-05-30 21:15 GMT
பெங்களூரு,

பத்திரிகையாளர் கவுரி லங்கேசை சுட்டுக்கொன்ற வழக்கில் 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு விசாரணை குழுவினர் நேற்று கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில், கைதான நவீன் குமார் பற்றி பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ். பிரபல பத்திரிகையாளரான இவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5-ந் தேதி அவருடைய வீட்டு முன்பு வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலையை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

கவுரி லங்கேஷ் கொலை குறித்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை வழக்கு தொடர்பாக சட்ட விரோதமாக துப்பாக்கி விற்பனை வழக்கில் தொடர்புடைய நவீன் குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்தனர். அப்போது கவுரி லங்கேஷ் கொலை வழக்கு பற்றி எந்த விவரங்களையும் அவர் கொடுக்கவில்லை. உண்மை கண்டறியும் சோதனைக்கும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கிடையே, நவீன் குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்ற வழக்கு மற்றும் எழுத்தாளர் பகவானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொடர்புடைய மங்களூருவை சேர்ந்த பிரவீன் என்ற சுசீத்குமார் என்பவரையும் கைது செய்து சிறப்பு விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கவுரி லங்கேசின் கொலை நடந்து சுமார் 9 மாதங்கள் ஆன நிலையில் நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் பெங்களூரு 3-வது கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதில், 131 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிகையில் நவீன் குமார், பிரவீன் ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

கைதான நவீன் குமாருக்கு கொலையாளிகள் பற்றிய விவரங்கள் தெரியும். ஆனால் அவர் போலீசாரிடம் கூற மறுக்கிறார். உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் கொலையாளிகள் விவரங்களை தெரிந்து விடும் என்ற அச்சத்தில் அவர் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுத்துள்ளார். கவுரி லங்கேசின் நடமாட்டத்தை நோட்டமிட்டு அதுபற்றிய விவரங்களை கொலையாளிகளிடம் நவீன் குமார் பகிர்ந்து கொண்டது தெரியவந்தது. மேலும் பெங்களூரு, பெலகாவியில் வைத்து கொலைக்கான சதித்திட்டத்தை தீட்டியதும் தெரியவந்துள்ளது என்பன போன்ற பல்வேறு விவரங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்