பிளஸ்–1 தேர்வு முடிவு வெளியீடு திருவள்ளூர் மாவட்ட மாணவ–மாணவிகள் 90.85 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ்–1 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் திருவள்ளூர் மாவட்ட மாணவ–மாணவிகள் 90.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

Update: 2018-05-30 23:00 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பிளஸ்–1 தேர்வு முடிவுகளை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:–

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்–1 பொதுத்தேர்வை அரசு பள்ளிகள் 96, பார்வையற்றோர் பள்ளி 1, நகராட்சி பள்ளிகள் 4, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் 5, காதுகேளாதோர் பள்ளி 2, அரசு நிதியுதவி பெறும் பள்ளி 13, சுயநிதி பள்ளிகள் 28, மெட்ரிக் பள்ளிகள் 195 என மாவட்டம் முழுவதும் உள்ள 344 பள்ளிகளில் மாணவர்கள் 19 ஆயிரத்து 909 பேர், மாணவிகள் 22 ஆயிரத்து 440 பேர் என மொத்தம் 42 ஆயிரத்து 349 பேர் எழுதினார்கள்.

அவர்களில் மாணவர்கள் 17 ஆயிரத்து 219 பேரும், மாணவிகள் 21 ஆயிரத்து 254 பேர் என மொத்தம் 38 ஆயிரத்து 473 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.49 சதவீதம் ஆகும். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.71 சதவீதம் ஆகும்.

மொத்த தேர்ச்சி விகிதம் 90.85 சதவீதம் ஆகும். பிளஸ்–1 பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே வழக்கம் போல அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்ச்சி விகிதமானது மாவட்ட அளவில் திருவள்ளூர் மாவட்டம் 21–வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல அரசு பள்ளி 1, பார்வையற்றோர் பள்ளி 1, காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளி 2, அரசு நிதி உதவி பெறும் பள்ளி 1, சுயநிதி பள்ளிகள் 13, மெட்ரிக் பள்ளிகள் 109 என மாவட்டம் முழுவதும் 127 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அருட்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்