ஈரோட்டில் தபால் ஊழியர்கள் உண்ணாவிரதம்

தபால் ஊழியர்கள் ஈரோட்டில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2018-05-31 22:15 GMT
ஈரோடு

கமலேஷ் சந்திராவின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்கம் மற்றும் தேசிய ஊரக தபால் சேவகர் சங்கம் சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் அகில இந்திய அளவிலான காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு தலைமை தபால் அலுவலக நிலையம் வளாகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு அகில இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் தட்சிணா மூர்த்தி தலைமை தாங்கினார்.

செயலாளர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். தேசிய ஊரக தபால் சேவகர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.எம்.ரவிக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் கிராமிய தபால் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் வேலுமணி மற்றும் கிராம தபால் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, தபால் நிலையங்களில் நடைபெறும் தபால் தலை விற்பனை, மணியார்டர், பதிவு தபால், சேமிப்பு கணக்கு, மாத வைப்புத்தொகை, கிராமிய காப்பீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன.

மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தபால்களும் மூட்டை, மூட்டையாக ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்