தரங்கம்பாடி கடற்பகுதியில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் பொதுமக்கள் அச்சம்

தரங்கம்பாடி கடற்பகுதியில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குகின்றன. இந்த ஜெல்லி மீன்கள் தாக்கினால் பாதிப்பு ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2018-05-31 23:00 GMT
பொறையாறு,

நாகை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில் கடந்த சில நாட்களாக ஜெல்லி மீன்கள் வரத்து அதிகமாக காணப்படுகிறது. ஜெல்லி மீன்களில் பலவகை உண்டு. இவ்வகை மீன்கள் வெள்ளை நிறத்தில் பாராசூட் குடை போன்று மென்மையான உடல் அமைப்பு கொண்டவை ஆகும். மீனின் உடல் பகுதியில் கனவாய் மீன்களுக்கு உள்ளது போல் தோகை (கூந்தல்) போன்ற உடலமைப்பு இருக்கும். அந்த கூந்தலில் விஷமுள் இருப்பதாக கூறப்படுகிறது. கடலில் மற்ற மீன்கள், ஜெல்லி மீன்களை பிடிக்க வரும் போது விஷமுள்ளால் தாக்கி தப்பித்து கொள்ளும். பெரும்பாலான ஜெல்லி மீன்கள் ஆழ்கடல் பகுதியில் இருக்கும். இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

ஜெல்லி மீன்களை, மனிதர்கள் கையால் பிடித்தாலோ அல்லது உடலில் பட்டாலோ அதில் உள்ள விஷம் பரவி விடும். மனித உடலில் விஷம் பரவிய பிறகு கண் எரிச்சல், அரிப்பு, கடித்த இடத்தில் தடிப்பு வாந்தி, மயக்கம் ஏற்படும். சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ‘ஜெல்லி மீன்‘ என்று ஆங்கிலத்திலும், ‘சொறி முட்டை‘ என தமிழிலும் இந்த மீன் அழைக்கப்படுகிறது. ஆழ்கடல் பகுதியில் வசிக்கும் இவ்வகை மீன்கள் இயற்கை மாற்றத்தால் கடற்கரை பகுதியில் ஒதுங்கியிருக்கும். பார்வைக்கு அழகாக தென்பட்டாலும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜெல்லி மீன் இனங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில் பல வண்ண ஜெல்லி மீன்கள் இந்தியா, இலங்கை, ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற கடற்பகுதியில் வாழக்கூடியதாகும்.

இந்நிலையில் நாகை மாவட்டம், தரங்கம்பாடி கடல் பகுதியில் தற்போது ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குகின்றனர். இதனால் கடலில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால், சிலர் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்களை தூரமாக நின்று பார்த்து செல்கின்றனர். கடந்த ஆண்டு தரங்கம்பாடி கடலில் குளித்த சிறுவர்களை ஜெல்லி மீன்கள் தாக்கியது. பின்னர் அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்