மூதாட்டியிடம் 6 பவுன் நகை அபேஸ் - போலீஸ்போல் நடித்து நூதன மோசடியில் ஈடுபட்ட 2 பேருக்கு வலைவீச்சு

ஈரோட்டில் போலீஸ்போல் நடித்து நூதன முறையில் மூதாட்டியிடம் 6 பவுன் நகையை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-06-03 23:15 GMT
ஈரோடு,

அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மனைவி மணிமேகலை (வயது 64). இவருடைய மகள் ராஜராஜேஸ்வரி கர்ப்பமாக இருப்பதால் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக கடந்த சில மாதங்களாக மணிமேகலை ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். நேற்று மதியம் மணிமேகலை தனது மகளை பார்ப்பதற்காக வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார்.

அவர் சம்பத்நகர் உழவர்சந்தை அருகில் சென்றபோது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் தங்களை போலீசார் என்று மணிமேகலையிடம் அறிமுகப்படுத்தி கொண்டனர். அப்போது அவர்கள், “திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், நகையை வெளியே தெரியும்படி அணிந்து செல்ல வேண்டாம்” என்று கூறினார்கள். மேலும், அணிந்து இருக்கும் தங்க சங்கிலியை கழற்றி பத்திரமாக கொண்டு செல்லுங்கள் என்றும் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

அந்த நபர்களை நம்பிய மணிமேகலையும் தான் அணிந்து இருந்த 6 பவுன் நகையை உடனடியாக கழற்றினார். அவரிடம் இருந்து நகையை வாங்கிய அந்த நபர்கள் ஒரு காகிதத்தில் நகையை மடக்கி மணிமேகலையிடம் கொடுத்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆஸ்பத்திரிக்கு சென்ற பிறகு மணிமேகலை நகையை எடுப்பதற்காக காகிதத்தை பிரித்து பார்த்தார். அப்போது அதில் கற்கள் மட்டுமே இருந்தது. நகையை காணவில்லை. இதை பார்த்ததும் மணிமேகலை அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிமேகலையிடம் நகையை அபேஸ் செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோட்டில் போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் மர்ம நபர்கள் 6 பவுன் நகையை அபேஸ் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்