செல்போனில் படம் எடுத்தபோது மின்னல் தாக்கி சென்னையை சேர்ந்தவர் பலி

கும்மிடிப்பூண்டி அருகே செல்போனில் படம் எடுத்தபோது மின்னல் தாக்கி சென்னையை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-06-06 22:15 GMT

கும்மிடிப்பூண்டி,

சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). மஸ்கட்டில் (வெளிநாடு) உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்த ரமேஷ், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து சென்னை வந்தார். பின்னர் தனது நண்பர்கள் கோடம்பாக்கத்தை சேர்ந்த சங்கர் (45) மற்றும் மயிலாப்பூரை சேர்ந்த பிரபாகரன் (44) ஆகியோருடன் சேர்ந்து பழைய கார்களை வாங்கி விற்பது உள்பட பல்வேறு தொழில்களில் பங்குதாரராக இருந்து வந்தார்.

இவர்களது நண்பரான பார்த்திபன் (45) கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தில் இறால் பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையை பார்ப்பதற்காக ரமேஷ் மற்றும் அவரது 2 நண்பர்களும் நேற்று மதியம் காரில் சுண்ணாம்புகுளம் கிராமத்திற்கு வந்தனர்.

இறால் பண்ணையை பார்த்திபனுடன் அவரது நண்பர்களும் பார்வையிட்டனர். ரமேஷ் முன்னால் செல்ல அவருக்கு பின்னால் பார்த்திபன் உள்ளிட்டோர் சென்றனர்.

இறால் பண்ணை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை தனது செல்போனில் படம் பிடித்தவாறு ரமேஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது இடியுடன் லேசான மழை பெய்தது.

அப்போது மின்னல் தாக்கியதில் ரமேஷ் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்தனர். ஆனால் அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

உயிரிழந்த ரமேசுக்கு உமா (38) என்ற மனைவியும், தியா (9) என்ற மகளும் உள்ளனர். ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்