கரூர் மாவட்டத்தில் 311 இடங்களில் மழைநீர் சேகரிக்கும் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்

கரூர் மாவட்டத்தில் 311 இடங்களில் மழைநீர் சேகரிக்கும் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறினார்.

Update: 2018-06-07 22:30 GMT
நச்சலூர்,

குளித்தலை வட்டம் இனுங்கூரிலுள்ள மாநில அரசு விதைப்பண்ணை மற்றும் சுத்திகரிப்பு நிலையம், முதலைப்பட்டி அரசு தோட்டக்கலை நாற்று பண்ணை, மாநில அரசு விதைப்பண்ணையிலிருந்து விதைகள் பெற்று வெண்டை சாகுபடி செய்த விவசாய நிலங்களை மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அரசு பல்வேறு தொழில்நுட்பங்களையும், யுக்திகளையும், இடுபொருட்களையும், வேளாண் கருவிகளையும் மானிய விலையில் விவசாயிகளுக்கு சம்பா குறுவை சிறப்பு தொகுப்பு திட்டங்கள் வாயிலாக வழங்கி குறைந்த செலவில் அதிக உற்பத்தி, குறைந்த நீர் மேலா ண்மை என பல திட்டங்களை வழங்கி தொடர்ந்து விவசாயம் செய்ய உதவி வருகிறது.

கரூர் மாவட்டத்திலுள்ள மாநில அரசு விதைப்பண்ணை மற்றும் விதை சுத்திகரிப்பு மூலம் ஆண்டிற்கு 200 டன் தரமான விதைகள் உற்பத்தி மற்றும் சுத்தி கரிப்பு செய்யப்பட்டு கரூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு நல்லதொரு மகசூலை எட்டியுள்ளனர். முதலைப்பட்டி அரசு தோட்டக்கலை நாற்று பண்ணை மூலம் தரமான விதை தேர்வு, பூச்சிக்கொல்லி மருந்துகள், நில சமன்பாடு உள்ளிட்ட தொழில் நுட்பங்களை கையாண்டு தக்காளி, வெண்டை, கத்திரி, மா, கொய்யா, மாதுளை, மிளகாய் போன்ற பணப்பயிர்களை நாற்றுகளாக விவசாயிகளுக்கு மானிய விலையிலும், இவற்றை சாகுபடி செய்ய 100 சதவீதம் மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகளையும், உபகரணங்களையும் அரசு வழங்கி வருகிறது. சொட்டு நீர் பாசனம், தடுப்பணைகள், பண்ணைக்குட்டைகள், மழைநீர் சேகரிக்கும் இடங்கள் என கரூர் மாவட்டத்தில் 311 இடங்களில் மழைநீர் சேகரிக்கும் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பணைகள் மற்றும் பண்ணைக்குட்டைகள் அமைத்திட இடம் தேர்வு செய்ய விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அரசின் மானிய விலையில் விதை மற்றும் சொட்டுநீர் பாசன அமைப்புகளை கொண்டு வெண்டை விவசாயம் செய்துள்ள இனுங்கூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரது வெண்டை சாகுபடி பரப்புகளை பார்வையிட்டார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்