வாலிபரால் கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவி தப்பி வந்தார் போலீஸ் விசாரணை

தக்கலை அருகே வாலிபரால் கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவி தப்பி வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-06-07 22:30 GMT
பத்மநாபபுரம்,

தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும், மாணவியின் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது, வெட்டிகோணத்தை சேர்ந்த சரவணன் (வயது 30) என்ற வாலிபர் மாணவியை அழைத்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து சரவணனையும், மாணவியையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று மாணவி ஒரு ஆட்டோவில் வீட்டில் வந்து இறங்கினார். உடனே, மாணவியின் பெற்றோர் அவரை அழைத்து கொண்டு தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவி கூறியதாவது:-

நான் பள்ளிக்கு செல்லும்போது சரவணன் அடிக்கடி பின்தொடர்ந்து வந்தார். சம்பவத்தன்று என்னிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். வெளியூர்களில் பல இடங்களில் சுற்றிவிட்டு ஊருக்கு வருவதற்காக வடசேரி பஸ் நிலையத்துக்கு வந்தோம். அப்போது, சரவணன் செல்போன் ரீசார்ஜ் செய்வதற்காக அருகில் இருந்த கடைக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் அவரிடம் இருந்து தப்பி ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தேன்.

இவ்வாறு மாணவி கூறினார்.

இதையடுத்து சரவணன் மீது போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். மேலும், மாணவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்