போளூரில் மூதாட்டி கொலை வழக்கு: கைதான 44 பேரின் காவல் 20-ந் தேதி வரை நீட்டிப்பு

போளூரில் மூதாட்டி கொலை வழக்கில் கைதான 44 பேரின் காவல் 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களை கோர்ட்டுக்கு அழைத்து வராததால் குடும்பத்தினர், உறவினர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2018-06-07 22:30 GMT
போளூர்,

போளூர் அருகே அத்திமூர் களியம் கிராமத்தில் சென்னையில் இருந்து சாமி கும்பிட கோவிலுக்கு சென்றவர்களை கடந்த மே மாதம் 9-ந் தேதி குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கிராம மக்கள் அடித்து உதைத்தனர். இதில் சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி அம்மாள் (வயது 65) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 62 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் 44 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த 44 பேரின் காவல் நேற்றுடன் முடிந்தது.

20-ந் தேதி வரை நீட்டிப்பு

இது தொடர்பான வழக்கு நேற்று திருவண்ணாமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்- 2 கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட்டு காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார். அப்போது அவர், இந்த சம்பவத்தில் கைதான 44 பேரின் காவலை வருகிற 20-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில் கைதான 44 பேரையும் போளூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிற்கு அழைத்து வருவார்கள் என நினைத்து அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் போளூர் கோர்ட்டு வளாகத்திலும், சாலையோர கடைகளிலும் கும்பல், கும்பலாக காத்திருந்தனர்.

ஆனால் கைதானவர்களை கோர்ட்டிற்கு அழைத்து வராததால், அவர்களது குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்தனர். 

மேலும் செய்திகள்