ராஜஸ்தான் மாநில கோவிலில் ஜனாதிபதிக்கு அவமதிப்பு: திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

ராஜஸ்தான் மாநில கோவிலில் ஜனாதிபதிக்கு அவமதிப்பு: தர்மபுரியில் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2018-06-07 22:30 GMT
தர்மபுரி,

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார். அப்போது அவரை அவமதிக்கும் வகையில் கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்ததாகவும், கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்து அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றதாகவும் தகவல் வெளியானது. ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அவமதிப்பை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் மாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், கருபாலன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

சாதிய கண்ணோட்டத்துடன் இந்திய ஜனாதிபதியை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த சாதியவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். வழிபாட்டு தலங்களில் சமத்துவத்தை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திராவிடர் கழக மாவட்ட நிர்வாகிகள் கதிர், சிவாஜி, பிரபாகரன், துரைசாமி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்