தனியார் ஜவுளி நிறுவனத்தை மிரட்டி ரூ.7 லட்சம் பறிப்பு சமூக ஆர்வலர் மீது கலெக்டரிடம் புகார்

சேலத்தில் தனியார் ஜவுளி நிறுவனத்தை மிரட்டி ரூ.7 லட்சம் பறித்த சம்பவத்தில் சமூக ஆர்வலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய மக்கள் இயக்கம், பா.ம.க.சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-06-07 22:45 GMT
சேலம்,

தேசிய மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகரும், அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீலுமான ஏ.பி.மணிகண்டன் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். பின்னர், அவர் கலெக்டர் ரோகிணியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சேலத்தில் ஓமலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தை மிரட்டி ரூ.7 லட்சத்தை பறித்த சேலத்தை சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நபர் சமூக ஆர்வலர் என்று கூறிக்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வருகிறார். இவர், மீது மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதல்- அமைச்சர், பிரதமர் ஆகியோரை பற்றி மிகவும் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். சேலம் விமான நிலைய விரிவாக்கம், சேலம்-சென்னை இடையே பசுமை வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறார்.

குண்டர் சட்டத்தில் கைது

எனவே, சமூக அமைதிக்கு எதிராக செயல்பட்டு வரும் அந்த சமூக ஆர்வலரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும், இவரது பராமரிப்பில் உள்ள மூக்கனேரி, குமரகிரி ஏரிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கையகப்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தேசிய மக்கள் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ம.க. நிர்வாகி மனு

இதேபோல், பா.ம.க.மாநில துணை பொதுச்செயலாளர் இரா.அருள் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிலர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், தனியார் ஜவுளி நிறுவனத்தை மிரட்டி சமூக ஆர்வலர் அவரது அறக்கட்டளைக்கு ரூ.7 லட்சம் வாங்கி உள்ளார். அவரது மிரட்டலுக்கு பயந்து தனியார் நிறுவனம் பணம் வழங்கியுள்ளது. இதற்கு உள்ளூரை சேர்ந்த 2 பிரமுகர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்