3 கொள்ளையர்கள் கைது ரூ.11½ லட்சம் தங்க கட்டிகள், கார் மீட்பு

திண்டிவனம் பகுதியை கலக்கிய 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.11½ லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள், கார் ஆகியவை மீட்கப்பட்டன.

Update: 2018-06-07 21:51 GMT
திண்டிவனம்,

திண்டிவனம் உட்கோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்றனர்.

இவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மேற்பார்வையில் திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், ரெங்கராஜ் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பகல் 12 மணி அளவில் திண்டிவனம்- மரக்காணம் கூட்டு ரோடு அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர்.

அப்போது அந்த காரில் 3 பேர் இருந்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். அதற்குள் அவர்கள் காரை வேகமாக எடுத்து திண்டிவனம் மின்துறை அலுவலக தடுப்பு சுவர் அருகில் நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். அதில் ஒருவருக்கு காலில் அடிபட்டது. தொடர்ந்து அவர்களை துரத்திச்சென்ற போலீசார் அவர்கள் 3 பேரையும் பிடித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சென்னை குமணன்சாவடி பாப்பாத்தி தர்கா கண்ட்ரோல்மெண்ட் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் மகன் காஜா என்கிற ஜான்பாஷா (வயது 33), சென்னை சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த ஜோகாராம் மகன் தர்மிசந்த் (38), ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சைலா கிராமத்தை சேர்ந்த மாங்கிலால் மகன் ஹீராலால் (31) ஆகிய 3 பேர் என்று தெரிய வந்தது.

இவர்கள் திண்டிவனம் பகுதியை கலக்கிய பிரபல கொள்ளையர்கள் என்பதும் தெரிய வந்தது. அதாவது, மரக்காணம் இந்திராநகரை சேர்ந்த ஆசிரியர் கோபு (47) வீட்டில் பூட்டை உடைத்து 21½ பவுன் நகைகள், ஒலக்கூர் ஈச்சேரியை சேர்ந்த வெங்கடேசன் (33) வீட்டு பூட்டை உடைத்து 4¼ பவுன் நகைகள், மயிலம் கள்ளகொளத்தூரை சேர்ந்த லோகநாதன் (33) வீட்டில் 9 பவுன் நகைகள், பெரமண்டூரில் வீட்டுக்கு வெளியில் தூங்கிக்கொண்டிருந்த கவிதா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி, பிரம்மதேசம் அருகே மானூரில் பழனி (48) என்பவர் வீட்டு பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

இதில் காஜா என்கிற ஜான்பாஷா மீது 45-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இவர்கள் கடந்த 4 மாதங்களில் திண்டிவனம், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். இது தவிர கார், மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்குகளிலும் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளையடித்த 50 பவுன் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக வைத்திருந்ததையும், 2 கடப்பாரைகள் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த கார் ஆகியவற்றையும் போலீசார் மீட்டனர். தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.11½ லட்சம் ஆகும். திண்டிவனம் பகுதியை கலக்கிய 3 கொள்ளையர்களை பிடித்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக் குமார் பாராட்டினார்.

மேலும் செய்திகள்