ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கு: பிவண்டி கோர்ட்டில் ராகுல் காந்தி 12-ந் தேதி ஆஜராகிறார்

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடுத்த அவதூறு வழக்கில் வருகிற 12-ந் தேதி பிவண்டி கோர்ட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆஜராகிறார்.

Update: 2018-06-07 22:45 GMT
மும்பை, 

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடுத்த அவதூறு வழக்கில் வருகிற 12-ந் தேதி பிவண்டி கோர்ட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆஜராகிறார்.

அவதூறு வழக்கு

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினருக்கு மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்தநிலையில் ராகுல் காந்தியின் பேச்சை வீட்டில் இருந்தபடி தொலைக் காட்சியில் பார்த்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ராஜேஷ் குண்டே என்பவர், ராகுல் காந்தி மீது தானே பிவண்டி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

நேரில் ஆஜராகிறார்

கடந்த மாதம் 2-ந் தேதி இந்த வழக்கு விசாரணை பிவண்டி கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது ராகுல் காந்தி ஆதாரமின்றி ஆர்.எஸ்.எஸ். மீது பழிசுமத்துவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, ராகுல் காந்தி இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்தநிலையில் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், வருகிற 12-ந் தேதி ராகுல் காந்தி பிவண்டி கோர்ட்டில் ஆஜராகப் போவதை உறுதிப் படுத்தினார்.

மேலும் வழக்கு விசாரணையை தொடர்ந்து ராகுல் காந்தி கட்சி நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்