‘பாலீஷ்’ போட்டு தருவதாக கூறி வியாபாரி மனைவியிடம் 8½ பவுன் நகை ‘அபேஸ்’

‘பாலீஷ்’ போட்டு தருவதாக கூறி, வியாபாரி மனைவியிடம் 8½ பவுன் நகையை மர்மநபர்கள் ‘அபேஸ்’ செய்தனர். கைவரிசை காட்டிய, வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்தசம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2018-06-07 23:42 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் பாறைப்பட்டி எம்.கே.எஸ். நகரை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (வயது 75). இவருடைய மனைவி ஆமினா பீவி (70). இவர்களின் மகன் முகமது சாதிக் (38). முகமது சாதிக் தோல் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி காமிலா பானு (30). இவர்கள் அனைவரும் எம்.கே.எஸ். நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வருகின்றனர். 2 தளங்களை கொண்ட அந்த குடியிருப்பில், முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் வசிக்கின்றனர்.

நேற்று வியாபாரம் சம்பந்தமாக முகமது சாதிக் வெளியே சென்றுவிட்டார். முகமது இப்ராகிம் தொழுகை செய்வதற்காக பள்ளிவாசலுக்கு சென்றுவிட்டார். வீட்டில் ஆமினா பீவியும், காமிலா பானுவும் மட்டும் இருந்தனர். இந்தநிலையில் மதியம் 12.30 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளனர். அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர் கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் முகமது சாதிக்கின் வீட்டுக்கு சென்று ஆமினா பீவி, காமிலா பானு ஆகியோரிடம், பழைய கவரிங் நகைகளை கொடுத்தால் அதனை ‘பாலீஷ்’ போட்டு புதியது போல மாற்றித்தருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து ஆமினா பீவி தான் அணிந்திருந்த கவரிங் சங்கிலி மற்றும் வளையலை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். அந்த வாலிபர்கள் ஒரு குக்கரில் வெந்நீர் வைத்து கொண்டு வரும்படி கூறியுள்ளனர். அதன்படி காமிலா பானு வெந்நீர் வைத்து கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபர்கள் வெந்நீரில் ஒரு பொடியை போட்டு கலக்கி, அதில் ஆமினா பீவி கொடுத்த நகைகளை போட்டுள்ளனர். 30 நிமிடம் கழித்து எடுத்து பார்த்த போது அந்த கவரிங் நகை பளபளவென்று மாறியிருந்தது. தங்க நகைகளையும் ‘பாலீஷ்’ செய்து தருவதாக அந்த வாலிபர்கள் கூறினர். இதனை உண்மை என்று நம்பிய காமிலா பானு தான் அணிந்திருந்த சங்கிலி, வளையல், மோதிரம் என 8½ பவுன் நகைகளை கழற்றி கொடுத்துள்ளார்.

இதையடுத்து 2 வாலிபர்களில் ஒருவர், ஒரு பொருளை கீழே வைத்துள்ளதாகவும், அதனை எடுத்து வருவதாகவும் கூறி சென்றுவிட்டார். இதையடுத்து மற்றொரு வாலிபர் மீண்டும் வெந்நீர் போட்டு கொண்டு வரும்படி காமிலா பானுவிடம் கூறியுள்ளார். அவர் குக்கரை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றவுடன், அந்த வாலிபர் நகையை எடுத்து கொண்டு திடீரென்று வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தார்.

இதனை பார்த்த ஆமினா பீவி கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த 2 வாலிபர்களும் தப்பியோடி விட்டனர். பின்னர் இதுகுறித்து நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்