வங்கி காவலாளி வயலில் பிணமாக கிடந்தார் மர்ம சாவுக்கு காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை

அஞ்சுகிராமம் அருகே இரவில் கடைக்கு சென்ற வங்கி காவலாளி வயலில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-06-08 22:45 GMT
அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே சத்தியநகர் பகுதியை சேர்ந்தவர் எட்வின் அருமைராஜ் (வயது53). இவர் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு செல்வ சுஜாதா (48) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மனைவி செல்வ சுஜாதா நெல்லை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார்.

எட்வின் அருமைராஜ் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் திரும்ப வரவில்லை. இதனால், அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் எடுத்து பேசப்படவில்லை. இதையடுத்து அவரை பல இடங்களில் தேடினர். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், நேற்று காலையில் வீட்டின் அருகே உள்ள வயலில் எட்வின் அருமைராஜ் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது வாயில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டது. அவரது ஒரு கையில் செல்போன் இருந்தது. அவர் சென்ற மோட்டார் சைக்கிள் சற்று தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து எட்வின் அருமைராஜ் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்