அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 7 லாரிகள் பறிமுதல்

திருச்சியில் இருந்து உரிய அனுமதி சீட்டு இன்றி மணல் கொண்டு வந்த 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-06-08 22:15 GMT
சிவகாசி,

தென் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிக்கு தற்போது திருச்சியில் இருந்து லாரிகளில் மணல் கொண்டு வரப்படுகிறது. மணல் கொண்டு வரும் போது அந்த லாரியில் உரிய அனுமதி சீட்டு கொடுக்கப்படும். அந்த உரிமை சீட்டை சோதனைக்கு வரும் அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் உரிய அனுமதி சீட்டு இன்றி திருட்டுத்தனமாக லாரிகளில் மணல் கொண்டு செல்லும் நிலை இருக்கிறது.

இந்த நிலையில் சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு பல இடங்களில் திடீர் சோதனை செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜா, மண்டல துணை தாசில்தார் செந்தில்வேல், வருவாய் ஆய்வாளர்கள் செல்வபகவதி (சிவகாசி), பாண்டி (திருத்தங்கல்) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இவர்கள் சாத்தூர், சிவகாசி ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்ட 3 மணல் லாரிகளை தடுத்து நிறுத்தி உரிய அனுமதி சீட்டை கேட்டனர். இதில் உரிய அனுமதி சீட்டு இன்றி மணல் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த 3 மணல் லாரிகளையும் பறிமுதல் செய்து சிவகாசி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினர். இதே போல் சிவகாசி நகர பகுதியில் நடந்த சோதனையில் 4 மணல் லாரிகள் உரிய அனுமதி சீட்டு இன்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த மணல் லாரிகளையும் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜா கூறியதாவது:-

திருச்சியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு லாரிகளில் உரிய அனுமதியின்றி மணல் கொண்டு வந்து அதிகவிலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டோம். இதில் 7 லாரிகள் பிடிபட்டது. இந்த லாரிகளை பறிமுதல் செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்