ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்; கடைகளுக்கு அபராதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

Update: 2018-06-08 22:45 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கலெக்டரின் உத்தரவின் பேரில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை உபயோகிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கத்துடனும் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

உதவி ஆணையர் (கலால்) செல்வகுமார் தலைமையில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாபு, நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, நகராட்சி பொறியாளர் ராமலிங்கம், நகரமைப்பு அலுவலர் மதியழகன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளடக்கிய குழுவினர் 2 நாட்கள் ஆண்டாள் கோவில் கடை வளாகம், பஸ் நிலையம், பூமார்க்கெட், நேதாஜி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது 1,000 கிலோ மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகளிலிருந்து கைப்பற்றினர். வணிக நிறுவனங்களில் ரூ.500 முதல் ரூ.3,000 வரை என மொத்தம் ரூ.17,300 அபராதம் வசூலிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட பைகள், கப்கள் ராஜபாளையம் நகராட்சி கலவை உரக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை துகள்களாக அரைக்கப்பட்டு ராஜபாளையம் நகராட்சியில் ஒப்படைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்