சித்தராமையாவுக்கு நெருக்கமானவர் முதல்–மந்திரியின் உத்தரவை மீறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி குமாரசாமி கடும் எச்சரிக்கை

முதல்–மந்திரியின் உத்தரவை மீறிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு குமாரசாமி கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

Update: 2018-06-08 21:45 GMT

பெங்களூரு,

முதல்–மந்திரியின் உத்தரவை மீறிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு குமாரசாமி கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

கடும் எச்சரிக்கை

கர்நாடக முதல்–மந்திரியாக குமாரசாமி கடந்த மாதம்(மே) 23–ந் தேதி பதவி ஏற்றார். கடந்த 6–ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. 25 எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளாக பதவி ஏற்றனர். இந்த நிலையில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கலால்துறையில் பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பழைய இடங்களுக்கே திருப்பி அனுப்ப உத்தரவிடும்படி அந்த துறை கமி‌ஷனர் மணிஷ் மவுட்கல்லுக்கு முதல்–மந்திரி குமாரசாமி உத்தரவிட்டார்.

ஆனால் முதல்–மந்திரி பிறப்பித்த இந்த உத்தரவை கலால் துறை கமி‌ஷனர் செயல்படுத்தவில்லை. அவர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் குமாரசாமியிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கலால் துறை செயலாளரை தனது அலுவலகத்திற்கு அழைத்து பேசிய குமாரசாமி, தான் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? என்று கோபமாக கேள்வி கேட்டார். மேலும் கலால்துறை கமி‌ஷனருக்கு, குமாரசாமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பணி இடைநீக்கம்

மாநில அரசை விட ஐ.ஏ.எஸ். அதிகாரி பெரிய நபரா? என்றும் அவர் கேட்டார். நான் பிறப்பித்த உத்தரவை வருகிற 11–ந் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும். மேலும் அரசின் உத்தரவை அலட்சியப்படுத்திய கலால்துறை கமி‌ஷனரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய குமாரசாமி, “சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கலால்துறையில் ஊழியர்கள், குறிப்பாக பெண் ஊழியர்கள் தூரமான இடங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் என்னிடம் வந்து முறையிட்டு மீண்டும் பழைய இடங்களுக்கே இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, அந்த பெண் ஊழியர்களை பழைய இடங்களுக்கே பணி இடமாற்றம் செய்யும்படி நான் கூறினேன். ஆனால் நான் பிறப்பித்த உத்தரவை இன்னும் கலால்துறை கமி‌ஷனர் அமல்படுத்தவில்லை. இது சரியல்ல. மாநில அரசை விட அவர் பெரியவர் இல்லை. வருகிற 11–ந் தேதிக்குள் அந்த ஊழியர்களை பழைய இடங்களுக்கு பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளேன்“ என்றார்.

இந்த நிலையில் பெங்களூரு உதவி கலெக்டர் ஜெகதீசை திடீரென பணி இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இவரும் முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்