காஞ்சீபுரம் மாவட்ட வளர்ச்சி பணிகளை பட்டியலிடும் ‘சிற்ப காஞ்சி’ வலைதள இணைப்பு பக்கம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

‘சிற்ப காஞ்சி’ எனும் புதிய வலைதள பக்கம் உருவாக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்து பேசினார்.

Update: 2018-06-08 22:52 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்ட இணையதளம் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அதனை மெருகூட்டும் வகையில் மாவட்ட இணையதளத்தில் ‘சிற்ப காஞ்சி’ எனும் புதிய வலைதள பக்கம் உருவாக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புதிதாக தொடங்கப்பட்ட இந்த வலைதள பக்கத்தில் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்து செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள், திட்டங்கள் மற்றும் அந்தந்த துறைகளின் சார்பில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும். அந்த புகைப்படங்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்படும். அந்த பதிவுகளை புதிய வலைதள பக்கத்தில் பொதுமக்கள் பார்வையிட்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் கவிதா, மதுராந்தகம் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் தணிகாச்சலம், தேசிய தகவல் மைய அலுவலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்