கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் நகையை அபேஸ் செய்த வாலிபர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி இளம்பெண்ணிடம் நகையை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-09 23:15 GMT
நாகர்கோவில்,

தக்கலையை சேர்ந்தவர் கல்பனா. இவருடைய தோழி அஞ்சு (வயது 25). திக்கணங்கோடு புதூர் அருகே உள்ள வண்ணான்விளையில் வசித்து வருகிறார். பட்டப்படிப்பு முடித்துள்ள அஞ்சு, வேலை தேடி வந்தார். இந்த நிலையில் அஞ்சுவுக்கு, தன் தோழி கல்பனா மூலமாக நாகர்கோவில் கோட்டார் வடலிவிளை வயல்தெருவை சேர்ந்த அமீர் சாகாவத்கான் (27) என்ற வாலிபர் அறிமுகம் ஆனார். அமீரும், கல்பனாவும் நட்பு ரீதியாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அமீர், தனக்கு நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பலரை தெரியும் என்றும், அவர்கள் மூலம் நிறைய பேருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்து இருப்பதாகவும் அஞ்சுவிடம் கூறியுள்ளார். இதை அஞ்சு உண்மை என நம்பிவிட்டார். எனவே தனக்கும் ஒரு வேலை ஏற்பாடு செய்து தருமாறு அமீரிடம் அஞ்சு கேட்டுள்ளார்.  

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அமீர் சம்பவத்தன்று, ‘வேலை வி‌ஷயமாக பேசிவிட்டேன். உனக்கு கண்டிப்பாக வேலை உண்டு. எனவே உனது சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு உடனே வர வேண்டும்‘ என்று அஞ்சுவை அழைத்துள்ளார். தனக்கு வேலை கிடைக்கப் போகிறது என்ற ஆசையில் அஞ்சு, தன் தோழி கல்பனாவையும் உடன் அழைத்து கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு விரைந்து வந்தார்.

இருவரும் வந்தவுடன் அமீர், அவர்களை தாசில்தார் அலுவலக கட்டிடத்தின் நுழைவு வாயிலில் உள்ள காத்திருப்பு பகுதியில் அமர வைத்தார். பிறகு 2–வது மாடியில் செயல்பட்டு வரும் சர்வேயர் அலுவலகத்துக்கு வேகமாக சென்றார். பின்னர் மீண்டும் கீழே வந்த அவர், ‘உனக்கு வேலை கிடைத்துவிட்டது. உடனே சர்வேயர் அலுவலகத்துக்கு சென்று உன் சான்றிதழ்களை கொடு‘ என்று அஞ்சுவிடம் கூறினார்.

அதைத் தொடர்ந்து அஞ்சுவும், கல்பனாவும் சர்வேயர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். அப்போது இருவரையும் தடுத்த அமீர், ‘நீங்கள் நகை அணிந்து சென்றால் வசதியானவர்கள் போல காட்சி அளிப்பீர்கள். இதனால் வேலை கிடைக்காமல் போகலாம். எனவே நகையை என்னிடம் தந்துவிட்டு செல்லுங்கள்‘ என்று தெரிவித்துள்ளார். ஆனால் அமீரின் சூழ்ச்சியை அறிந்திராத அஞ்சு தான் அணிந்திருந்த 2½ பவுன் நகையை கழற்றி கொடுத்தார். கல்பனாவும் தான் அணிந்திருந்த கவரிங் நகையை கழற்றி கொடுத்துள்ளார். கல்பனா கொடுத்தது கவரிங் நகை என்று அமீருக்கு தெரியாது.

 பின்னர் சர்வேயர் அலுவலகத்துக்கு 2 பேரும் சென்றனர். அங்கு அமீர் சொன்னதுபோல் யாரும் இல்லை. உடனே 2 பேரும் கீழே இறங்கி வந்தனர். அங்கு அமீரை காணவில்லை. அதன்பின்னர்தான் அஞ்சுவுக்கும், கல்பனாவுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

 இதனையடுத்து நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் அஞ்சு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் நகையை அபேஸ் செய்த அமீரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக போலீசாருக்கு ‘டிமிக்கி‘ கொடுத்து வந்த அமீர் நேற்று காலையில் வீட்டில் இருந்தபோது போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து அமீரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது போலீசாரிடம் அமீர் கூறியதாவது:–

 கல்பனா என்பவர் எனக்கு முகநூல்(பேஸ்புக்) மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினோம். நான் கல்பனாவை காதலித்தேன். என் காதலை அவரிடம் கூறி திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினேன். ஆனால் அவர், என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். வேறு ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக கூறினார். இதனால் மனவேதனை அடைந்த நான் கல்பனாவை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

அதுதொடர்பாக சிந்தித்தபோது தான் கல்பனா மூலமாக அஞ்சு அறிமுகம் ஆனார். அவர் வேலை தேடி கொண்டு இருப்பதும் எனக்கு தெரியவந்தது. அவர் மூலமாக கல்பனாவை ஏமாற்ற திட்டமிட்டேன். எனவே தான் வேலை வாங்கி தருவதாக கூறி இருவரிடமும் நகையை வாங்கிவிட்டு தலைமறைவானேன். ஆனால் நகையை அடகு வைக்க சென்றபோது தான் கல்பனா கழற்றி தந்தது கவரிங் நகை என்பது தெரியவந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து அமீரிடம் இருந்து நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்