20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதால் பாஷாவை விடுதலை செய்யக்கோரி கலெக்டரிடம் மனு

20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதால் பாஷாவை விடுதலைசெய்யக்கோரி கலெக்டரிடம் அவருடைய மகன் மற்றும் மகள்கள் மனு அளித்தனர்.

Update: 2018-06-09 23:15 GMT

கோவை,

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாஷா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக்கோரி பாஷாவின் மகன் சித்திக், மகள்கள் மூபினா, ருக்ஷானா ஆகியோர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஹரிகரனிடம் மனு அளித்தனர்.

அதில் எங்களுடைய தந்தை பாஷாவுக்கு 78 வயதாகிறது. அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நோய் வாய்ப்பட்டு நடக்க முடியாமல் உள்ளார். தமிழக அரசு தற்போது 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்து வருகிறது.

அதன்படி எங்கள் தந்தை பாஷாவையும் விடுதலை செய்யக்கோரி சிறைத்துறை தலைவருக்கு ஏற்கனவே மனு அனுப்பி இருந்தோம். சமீபத்தில் விடுதலை செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளின் பட்டியலில் அவருடைய பெயரும் வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் வரவில்லை.

மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்து, அவருடைய வயது மூப்பு மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு எங்களுடைய தந்தையை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் பாஷாவின் மகன் சித்திக் நிருபர்களிடம் கூறும்போது, ‘கோவை சிறையில் அபுதாகீர் என்பவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளார். திண்டுக்கல்லை சேர்ந்த மீராமுகைதீனும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே நீண்டநாட்களாக சிறையில் உள்ளவர்களையும், உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளவர்களையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்