குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-09 23:00 GMT

விழுப்புரம்,

விக்கிரவாண்டி தாலுகா பனையபுரம் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக இப்பகுதியில் உள்ள 30 வீடுகளை காலி செய்ய சொல்லி காவல்துறை மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்களை மிரட்டி வருவதாக தெரிகிறது.

இந்த குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நேற்று மதியம் அப்பகுதி மக்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் கலியமூர்த்தி, விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், காணை ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ் ஆகியோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயனை சந்தித்து, நாங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்களுக்கு மாற்று இடம் எதுவும் இல்லை. சாலை பணிக்காக எங்களுக்கு இழப்பீடு வழங்காமலேயே, எங்களது வீடுகளை அகற்ற முயற்சிக்கின்றனர். எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அதேநேரத்தில் நாங்கள் கட்டியுள்ள வீடுகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.

இதை கேட்டறிந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதை ஏற்ற பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்