மத்திய அரசு நதிநீர் இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்

மத்திய அரசு நதிநீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி கூறினார்.

Update: 2018-06-09 22:30 GMT
திருவண்ணாமலை,

தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருவண்ணாமலை திருவூடல் தெருவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் சின்னசாமி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் பேசினார். முன்னதாக அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

மத்திய அரசு நதிநீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டும், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு இன்னும் தண்ணீர் கிடைக்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

விவசாய பொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அறிவித்த உரிய விலையை வழங்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா விவசாய கடன் வழங்குவது போன்று, தேசிய வங்கிகளிலும் வட்டியில்லா விவசாய கடன் வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.

மேலும் 1970-ம் ஆண்டு முதல், விவசாயிகளுக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் ஜூலை 5-ந்தேதி தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்ளும் பேரணி மற்றும் கூட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் பேரணி, கூட்டம் ஆகியவை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், பொதுச் செயலாளர் சுந்தரம், செயலாளர் தனபால் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்