அனைத்து வட்டார வள மையத்திலும் தொலைப்பேசி, நகர்வு பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்

அனைத்து வட்டார வளமையத்திலும் தொலைப்பேசி, நகர்வு பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி வனஜா உத்தரவிட்டார்.

Update: 2018-06-09 22:45 GMT
புதுக்கோட்டை,

கல்வி தகவல் மேலாண்மை முறைமை தொடர்பான ஆய்வு கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி வனஜா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு வட்டார வளமையத்திலும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு திட்டக்கூறுகளை சுழற்சி முறையில் மாற்றிக்கொடுத்து பணி புரிய செய்ய வேண்டும்.

பள்ளிகளை பார்வையிட செல்லும் ஆசிரியர் பயிற்றுனர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளிலும், வட்டார வளமையத்திலும் தொலைப்பேசி பதிவேடு, நகர்வு பதிவேடு போன்றவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். என உத்தரவிட்டார். மேலும் ஆசிரியர் பயிற்றுனர்கள் முன் மாதிரியாக செயல்பட்டு கல்வி தரத்தினை உயர்த்த பாடுபட வேண்டும். கல்வி தகவல் மேலாண்மை முறைமையின் கீழ் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படம், ஆதார் எண், உள்ளிட்ட மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதை பள்ளியின் வருகை பதிவேட்டுடன் ஒப்பீடு செய்ய வேண்டும்.

2018-19-ம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேவையான திருத்தம் செய்தல், மாணவர் சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பான பணிகள் ஆகியவற்றை உடனடியாக தொடங்க வேண்டும். குறிப்பாக இந்த ஆய்வு கூட்டத்திற்கு வந்துள்ள அனைவரும் தீவிரமாக செயல்பட்டு இந்த ஆண்டு கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் புததுக்கோட்டை மாவட்டம் 100 சதவீதம் இலக்கினை அடைய பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் சாமி.சத்தியமூர்த்தி, திராவிடச்செல்வம் கலந்து கொண்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். இதில் இலுப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி குணசேகரன், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்