நிலக்கோட்டை நடராஜர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கடத்தல்? செயல் அலுவலரிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரணை

நிலக்கோட்டை நடராஜர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்டதா? என்பது குறித்து கோவில் செயல் அலுவலரிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.

Update: 2018-06-09 23:15 GMT
நிலக்கோட்டை, 

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி கோவிலில் முருகன் சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பழனி கோவில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக ஸ்தபதி முத்தையா, அப்போதைய பழனி முருகன் கோவில் இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் பல முக்கிய அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி நடராஜர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளப்பட்டியை சேர்ந்த கனிக்குமார் (வயது 40) என்பவர், தமிழக அரசுக்கும், சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கும் ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், நிலக்கோட்டை நடராஜர் கோவிலில் திருப்பணி செய்வதற்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் இருந்த நடராஜர் ஐம்பொன் சிலை, மாணிக்கவாசகர் சிலை, விநாயகர் சிலை உள்ளிட்ட சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

பின்னர் அவை, நிலக்கோட்டை அகோபில நரசிம்ம பெருமாள் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ஆனால் அந்த சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டுவுக்கு, ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் நேற்று நடராஜர் கோவில் செயல் அலுவலர் பூபதியிடம் விசாரணை நடத்தினார். மேலும் அவரை அகோபில நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு அழைத்து சென்று சிலைகள் குறித்து கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி அகோபில நரசிங்க பெருமாள் கோவில் பூசாரியிடமும் விசாரணை நடத்தினார்.

அப்போது அவர்கள், நடராஜர் கோவில் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் சிலை இருக்கும் இடத்தை காண்பித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வைத்து அவை உண்மையான சிலைகள் தானா? என்பது பற்றி ஆய்வு நடத்தப்படும் என போலீஸ் துணை சூப்பிரண்டு தெரிவித்தார். இந்த விசாரணையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்