சிவகிரி வனப்பகுதியில் இறைச்சிக்காக மானை சுட்டுக்கொன்ற 4 பேர் கைது துப்பாக்கி–தோட்டாக்கள் பறிமுதல்

சிவகிரி வனப்பகுதியில் இறைச்சிக்காக மானை வேட்டையாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி–தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-06-09 21:15 GMT
சிவகிரி, 

சிவகிரி வனப்பகுதியில் இறைச்சிக்காக மானை வேட்டையாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி–தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரோந்து பணி 

நெல்லை மாவட்ட வன அலுவலர் திருமால் உத்தரவின் பேரில் சிவகிரி வனச்சரகம் ஸ்டாலின் தலைமையில் சிவகிரி தெற்கு பிரிவு வனவர் லூமிக்ஸ், வனக்காப்பாளர்கள் அஜித்குமார், மணிகண்டன் மற்றும் தங்கராஜா ஆகியோர் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிவகிரி பீட் கோம்பையாற்று பகுதியில் பெரிய ஆவுடைப்பேரி கண்மாய் அருகே உள்ள முஸ்டபதி சரக பகுதியில் 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் சாக்குப்பைகளுடன் வந்தனர். வனத்துறையினரை கண்டவுட 2 பேர் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

மானை சுட்டுக்கொன்று... 

பின்னர் வனத்துறையினர் அந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அவர்கள் கையில் வைத்திருந்த சாக்குப்பைகளை சோதனை செய்தனர். அதில் மான் இறைச்சி இருந்தது தெரியவந்தது. உடனே வனத்துறையினர் அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சிவகிரி குமாரபுரம் அண்ணா வாழையடி தெருவை சேர்ந்த குபேந்திரன் (வயது 30), காமராஜர் கீழத்தெருவை சேர்ந்த முருகன் (41), செல்வகுமார் (29), இன்னொரு முருகன் (30) என்பதும், தப்பி ஓடியவர்கள் மருதக்கிழவன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் (63), அண்ணா வாழையடி தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 6 பேரும் அந்த பகுதியில் 2½ வயதுடைய மானை துப்பாக்கியால் சுட்டு கொன்று அதன் இறைச்சியை சாக்குப்பைகளில் கட்டி, மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றது தெரியவந்தது.

4 பேர் கைது 

உடனே வனத்துறையினர் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த துப்பாக்கி, 6 தோட்டாக்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், மான் இறைச்சி, அரிவாள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய மாரியப்பன் மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்