தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் குறையும்: முதல்–அமைச்சர் நாராயணசாமி பேட்டி

புதுவையில் தனியார் மருத்துவக்கல்லூரியில் அரசு ஒதுக்கீடு இடங்கள் குறையும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-06-09 22:45 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சத்யா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள், சுவைப் எந்திரங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளன.

மற்றொரு குற்றவாளியான சந்துருஜியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக இது வரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சி.ஐ.டி., சைபர் கிரைம் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையில் எந்த அரசியல் தலையீடும் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன்.

இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து கல்லூரிகளுக்கும் ஆன்–லைன் மூலம் மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்கும் முறையை கொண்டு வந்துள்ளோம். கடந்த 7–ந் தேதி முதல் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு புதுச்சேரியில் இருந்து 753 பேரும், பிற மாநிலங்களில் இருந்து 1,183 பேரும், வெளிநாடு வாழ் இந்தியர் 3 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மூன்று மருத்துவ கல்லூரிகளில் 165 இடங்களை பெற்றோம். இந்த ஆண்டு அதிகப்படுத்தி தர கூட்டம் நடத்தினோம். பிம்ஸ் மருத்துவ கல்லூரியின் இடங்கள் 150–ல் இருந்து 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 கல்லூரிகளிலும் மொத்த இடங்கள் 400 ஆக குறைந்து விட்டது. இதனால் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் குறையும்.

கட்டண நிர்ணய குழுவின் முதல் கூட்டம் ஏற்கனவே நடந்தது. 2–வது கூட்டத்தில் கட்டணத்தை முடிவு செய்ய வேண்டும். அரசு இட ஒதுக்கீட்டில் வருபவர்களுக்கு ஆண்டுக்கு எவ்வளவு கட்டணம், பொதுப்பிரிவில் சேருபவர்களுக்கு எவ்வளவு கட்டணம் என்பதை விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்று கட்டண நிர்ணய குழுவிடம் கேட்டுள்ளோம்.

வருகிற செவ்வாய்க்கிழமை (12–ந்தேதி) தனியார் மருத்துவ கல்லூரி உரிமையாளர்களை மீண்டும் அழைத்துப் பேச உள்ளோம். அன்று தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசுக்கு வழங்கும் இடங்கள் குறித்து முடிவு செய்யப்படும். தேவைப்பட்டால் விண்ணப்பங்கள் பெறும் தேதி நீட்டிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்