பிளஸ்-2 விடைத்தாளில் திருத்தப்படாத 6 பக்கங்கள் மாணவி அதிர்ச்சி

கடந்த மாதம் 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை தொடர்ந்து கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து முடியும் தருவாயில் உள்ளது.

Update: 2018-06-09 22:45 GMT
திருச்சி,

கடந்த மாதம் 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை தொடர்ந்து கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து முடியும் தருவாயில் உள்ளது. இந்தநிலையில் சில மாணவர்கள் தங்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால் விடைத்தாள் நகல்களை கேட்டும், மறுக்கூட்டலுக்கும் விண்ணப்பித்து இருந்தனர். திருச்சி ஹோலிகிராஸ் பள்ளியில் படித்த திருவெறும்பூரை சேர்ந்த திவ்யா, மற்றொரு பள்ளியில் படித்த ஹர்ஷினி ஆகியோர் விடைத்தாள் நகல்கள் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இருவருக்கும் விடைத்தாள்களின் நகல்கள் கொடுக்கப்பட்டன. இதனை பார்த்தபோது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திவ்யா விண்ணப்பித்து பெற்ற கணிதவியல் விடைத்தாளில் 6 பக்கங்கள் முற்றிலும் திருத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக அவருக்கு 40 மதிப்பெண்கள் கிடைக்காமல் போனது. இதேபோல் ஹர்ஷினி விண்ணப்பித்து பெற்ற கணித பாட விடைத்தாளில் சரியாக எழுதப்பட்ட 2 பக்கம் விடை தவறு என்று திருத்தப்பட்டு இருந்தது. இதனால் அவருக்கு 6 மதிப்பெண்கள் குறைந்து விட்டது. இதையடுத்து இருவரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு, அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று முறையிடும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனால் அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகத்துக்கு இருவரும் சென்று கேட்டபோது, நாட்கள் முடிந்து விட்டதாகவும், சென்னைக்கு சென்று தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டது. இதனால் இருவரும் செய்வதறியாது தவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்