பரங்கிமலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பரங்கிமலையில், நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக கீழே இறங்கி விட்டதால் கல்லூரி பேராசிரியை மற்றும் டிரைவர் உயிர் தப்பினர்.

Update: 2018-06-09 22:45 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சித்ரா(வயது 42). இவர் தாழம்பூரில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை தனது காரில், டிரைவர் கிருபா(55) உடன் கல்லூரிக்கு சென்றார்.

பரங்கிமலை பட்ரோடு வழியாக சென்றபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதை கண்டதும் டிரைவர் கிருபா, காரை சாலையோரம் நிறுத்தினார். பேராசிரியை சித்ராவும், டிரைவர் கிருபாவும் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினார்.

சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இதுபற்றி பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பேராசிரியை சித்ரா, டிரைவர் கிருபா இருவரும் உடனடியாக காரில் இருந்து இறங்கி விட்டதால் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்