பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒத்திவைக்கப்பட்ட ஜெயநகர் தொகுதியில் பகிரங்க பிரசாரம் ஓய்ந்தது நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது

பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒத்திவைக்கப்பட்ட ஜெயநகர் தொகுதியில் நாளை(திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

Update: 2018-06-09 21:30 GMT

பெங்களூரு, 

பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒத்திவைக்கப்பட்ட ஜெயநகர் தொகுதியில் நாளை(திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி அத்தொகுதியில் பகிரங்க பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

ஜெயநகர் தொகுதி தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம்(மே) 12–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம்(மே) 4–ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் ஜெயநகர் தொகுதியில் மே 12–ந் தேதி நடைபெற இருந்த தேர்தல், ஜூன் மாதம் 11–ந் தேதி(அதாவது நாளை) நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைத்துள்ளதால், ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜனதாதளம்(எஸ்) ஆதரவு அளிக்கும் என்று, அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா அறிவித்துள்ளார். இதனால் அந்த தொகுதியில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பகிரங்க பிரசாரம் ஓய்ந்தது

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் அறிவித்தபடி ஜெயநகர் தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் ஒரு லட்சத்து, 2 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 500 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 16 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். ஒட்டு மொத்தமாக 2 லட்சத்து 3 ஆயிரத்து 184 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்காக 216 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்களும், முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதுபோல், பா.ஜனதா வேட்பாளர் பிரகலாத் பாபுவுக்கு ஆதரவாக மாநில தலைவர் எடியூரப்பா, மத்திய மந்திரி அனந்தகுமார், முன்னாள் துணை முதல்–மந்திரி அசோக் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்.

144 தடை உத்தரவு

ஜெயநகர் தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதையொட்டி, அதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேலும் ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடைபெற ஜெயநகர் தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் ஜெயநகர் தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாளை நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 13–ந் தேதி எண்ணப்பட இருக்கிறது.

மேலும் செய்திகள்