மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர தயாராக உள்ளனர்

மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர தயாராக உள்ளார்கள் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-09 21:30 GMT

பெங்களூரு, 

மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர தயாராக உள்ளார்கள் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் பா.ஜனதாவின் விவசாயிகள் பிரிவு தலைவர்களுடன் மாநில தலைவர் எடியூரப்பா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது எடியூரப்பா பேசியதாவது:

– நீண்ட நாட்கள் நீடிக்க போவதில்லை

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் தான் உள்ளன. இந்த தேர்தலில் பா.ஜனதாவை அதிக இடங்களில் வெற்றி பெற வைக்க அனைவரும் உழைக்க வேண்டும். மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வரவேண்டும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும், அதுவே நமது நோக்கமாக இருக்க வேண்டும். கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா 104 எம்.எல்.ஏ.க்களுடன் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ளது. நம்மிடம் உள்ள பலத்தின் மூலம் மாநில மக்கள் பெருமைப்படும் அளவுக்கு சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.

37 இடங்களில் வெற்றி பெற்ற ஜனதாதளம்(எஸ்) கட்சியிடம் காங்கிரஸ் மண்டியிட்டு, முதல்–மந்திரி பதவியை குமாரசாமிக்கு விட்டு கொடுத்துள்ளனர். மாநிலத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 15 நாட்களாக கூட்டணி ஆட்சி எப்படி நடந்து வருகிறது என்பதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த கூட்டணி ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்க போவதில்லை.

எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர...

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தாலும், அந்த கட்சிகள் கூட்டணி வைத்திருப்பது, பல்வேறு எம்.எல்.ஏ.க்களுக்கு விருப்பம் இல்லாமல் உள்ளது. 2 கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர். கூட்டணி ஆட்சி பிடிக்காமலும், மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவில் சேர தயாராக உள்ளனர். பா.ஜனதா கட்சியில் சேருவதற்கு காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் ஒற்றை காலில் நிற்கிறார்கள்.

முதல்–மந்திரியான 24 மணிநேரத்தில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வேன் என்று குமாரசாமி கூறினார். ஆனால் தற்போது கூட்டணி ஆட்சி நடப்பதால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மறுத்து வருகிறார். கூட்டணி ஆட்சியின் தோல்வி மற்றும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு எடியூரப்பா பரபரப்பாக பேசினார்.

மேலும் செய்திகள்