கோவையில் குடும்ப தகராறில் பயங்கரம்: மருமகன் கத்தியால் குத்திக்கொலை

கோவையில் குடும்ப தகராறில் மருமகன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாமனார் பெயிண்டரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-06-10 22:30 GMT

கணபதி,

கோவை கணபதி எப்.சி.ஐ. சாலையை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 55), பெயிண்டர். இவருடைய மகள் சாரதா (28). கணவர் குணவேல் (32). இவர்களுக்கு 2½ வயதில் அஸ்வந்த் என்ற மகன் உள்ளான். குணவேல் பெங்களூருவில் உள்ள தனியார் போர்வெல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் பெங்களூரிலேயே தங்கியிருப்பார். அடிக்கடி கோவை வருவார்.

தியாகராஜன் தனது மகளை கணபதி போலீஸ் குடியிருப்பில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளார். குணவேல் அடிக்கடி கோவை வந்து மனைவி மற்றும் மகனை பார்த்து செல்வார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குணவேலுக்கும், சாரதாவுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் குணவேல் மனைவியை அடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சாரதா கணவரிடம் கோபித்துக் கொண்டு சில நாட்களுக்கு முன்பு தந்தை தியாகராஜனின் வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் தியாகராஜன் ஆத்திரம் அடைந்தார்.

இந்த நிலையில் மருமகன் குணவேல் நேற்று வீட்டில் இருப்பதாக மாமனார் தியாகராஜனுக்கு தெரியவந்தது. குடும்பத்தகராறில் மகளை அடித்தது குறித்து கேட்பதற்காக நேற்று இரவு 9 மணியளவில் மருமகன் வீட்டுக்கு தியாகராஜன் சென்றார். அங்கு வைத்து மாமனார், மருமகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தியாகராஜன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குணவேலை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் குணவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து தியாகராஜன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். குணவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகனை கொன்ற மாமனார் தியாகராஜனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்