போக்குவரத்து தொழிலாளர்களின் 4 மாத நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும் அமைச்சர் பேட்டி

போக்குவரத்து தொழிலாளர்களின் 4 மாத நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2018-06-10 23:00 GMT
கரூர்,

கரூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிகழ்ச்சி முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் நகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முன்பு ரூ.68 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நெரூர் காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடந்தன. தற்போது மீண்டும் ரூ.9 கோடி நிதி வழங்கப்பட்டு இருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த பணிகள் நிறைவுற்று பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இந்த ஆட்சி கவிழும் என சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஜெயலலிதாவின் வழியில் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் தொடரும். அது மட்டும் அல்ல வருகிற 2021 தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெறுவோம்.

போக்குவரத்து தொழிலாளர்களின் 4 மாத நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும். சேலத்தில் இருந்து இயக்கப்படக்கூடிய ரெயில் கரூரில் இருந்து இரவு நேரத்தில் சென்னைக்கு இயக்க ஏற்பாடு நடக்கிறது. குளிர்சாதன வசதியுடனான படுக்கை உள்ளிட்ட வசதியுடன் நவீன சொகுசு அரசு விரைவு பஸ்கள், தனியாருக்கு இணையாக உருவாக்கப்பட்டு வருகின்றன. பாடி கட்டும் பணி முடிந்ததும் அவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்