விளாத்திகுளம் அருகே பொதுமக்கள் முற்றுகையிட்டதால் மணல் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம் சாலை மறியல்; அதிகாரிகள் சமரசம்

விளாத்திகுளம் அருகே கண்மாயில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால், மணல் கொள்ளையர்கள் வாகனங்களை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

Update: 2018-06-10 21:30 GMT
விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே கண்மாயில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால், மணல் கொள்ளையர்கள் வாகனங்களை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் முற்றுகை

விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி பெரிய கண்மாயில் சிலர் நேற்று காலையில் பொக்லைன் எந்திரம் மூலம் சரள் மற்றும் களிமண்ணை நீக்கி விட்டு 14 அடி ஆழத்தில் சட்டவிரோதமாக மணலை அள்ளி 5 லாரிகளில் ஏற்றி கொண்டு இருந்தனர். இதை அறிந்த மார்த்தாண்டம்பட்டி கிராம மக்கள் திரண்டு சென்று அந்த பகுதியை முற்றுகையிட்டனர்.

சரள் மண்ணை அள்ள அனுமதி பெற்றுவிட்டு, சட்டவிரோதமாக அதிக ஆழம் தோண்டி மணலை அள்ளியது ஏன்? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? என பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். இதை அறிந்த தலையாரி அரியநாச்சியும் அங்கு வந்தார். கண்மாயில் மணல் அள்ளுவதற்கு உரிய ஆவணத்தை தருமாறு அவர்களிடம் கேட்டார். இதை தொடர்ந்து அந்த நபர்கள், வாகனங்களை விட்டு விட்டு அந்த பகுதியில் இருந்து தப்பி சென்று விட்டனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மார்த்தாண்டம்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக விளாத்திகுளம் தாசில்தார் லெனின், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்மந்தப்பட்ட மணல் கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும், மணல் கொள்ளையர்களால் சிதைக்கப்பட்ட கண்மாய் கரை சீரமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

மேலும் செய்திகள்