கடலூரில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு

கடலூரில் டாஸ்மாக் கடையின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-06-10 23:00 GMT
கடலூர்,

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் கடந்த 8-ந்தேதி கடலூர் கம்மியம்பேட்டை மற்றும் நடுவீரப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் புகுந்து மதுபாட்டில்களை உடைத்து சூறையாடினர்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் நேற்று கடலூரில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கடலூர் செம்மண்டலம்-கம்மியம்பேட்டை இணைப்பு சாலையில் சிறிய சந்துக்குள் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடலூர் அருகே உள்ள அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் (வயது 47) மேற்பார்வையாளராகவும், கோண்டூரை சேர்ந்த ராமச்சந்திரன்(43), வரக்கால்பட்டை சேர்ந்த பழனிவேல்(42) ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்கள் நேற்று வழக்கம்போல டாஸ்மாக் கடையில் அமர்ந்து மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். பகல் 1.30 மணியளவில் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென டாஸ்மாக் கடை இருந்த சந்துக்குள் புகுந்தது. இதனால் ஏதோ விபரீதம் நிகழப்போவதை அறிந்த டாஸ் மாக் கடை ஊழியர்கள் அவசர அவசரமாக கடைக்குள் இருந்தபடியே இரும்பு கதவை உள்பக்கமாக மூடினர்.

பின்னர் அந்த கும்பல் கையில் வைத்திருந்த 2 பெட்ரோல் குண்டுகளை டாஸ்மாக் கடையை நோக்கி வீசிவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென் றது. இதில் ஒரு குண்டு இரும்பு கதவில் பட்டு வெடித்ததால் எழுந்த தீப்பொறிகள் அருகில் இருந்த வைக்கோல் கட்டுகள் மீது விழுந்தன. இதனால் அந்த வைக்கோல் கட்டுகள் தீப்பிடித்து எரிய தொடங்கின. இன்னொரு குண்டு வெடிக்காமல் கடையின் முன்பு விழுந்து கிடந்தது.

அப்போது காற்றும் பலமாக வீசியதால் வைக்கோல் கட்டுகளில் பிடித்த தீ மளமளவென எரிய தொடங்கியது. இதையடுத்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியே வந்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கடலூர் நிலைய தீயணைப்பு அதிகாரி ஸ்ரீநிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் டாஸ்மாக் கடை முன்பு எரியாமல் கிடந்த பெட்ரோல் குண்டை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேல்முருகன் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் டாஸ்மாக் கடையை சூறையாடிய வழக்கில் கைதானவர்களை விடுவிக்கக்கோரி 10 பேர் கொண்ட கும்பல் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றார்களா? அல்லது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பெட்ரோல் குண்டுகளை வீசிய கும்பலை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா, செம்மண்டலம் சிக்னலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இருப்பினும், பெட்ரோல் குண்டுகளை வீசிய கும்பலை பிடித்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும்

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தால் கடலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்