சீரான மின்சாரம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூரில் உள்ள அன்பு நகர் பகுதிக்கு சீரான மின்சாரம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-06-10 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் நகர விஸ்தரிப்பு பகுதிகளான 4 ரோடு அருகே உள்ள அன்பு நகர், அண்ணாமலையார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதிகளில் சிறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. அன்புநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதிக்கு சீரான மின்சாரம் வழங்கப்படாமல் குறைவழுத்த மின்சாரமே வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அன்பு நகரில் வசிக்கும் பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை பெரம்பலூர்-அரியலூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், “அன்பு நகர் பகுதிக்கு, சீரான மின்சாரம் வழங்கக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது பணியில் இருந்த மின்சார வாரிய அதிகாரிகள், நகரப்பகுதிக்கு வழங்கும் மின்சாரத்தை இந்த பகுதிக்கு மாற்றி கொடுத்தனர். இதனையடுத்து 6 மாதம் சீரான மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென நகரப்பகுதி மின்சாரத்தை நிறுத்தி விட்டு மீண்டும் கிராம பகுதிகளுக்கு செல்லும் மின்சாரம் அன்பு நகர் பகுதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் குறைவழுத்த மின்சாரமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அன்றாட பணிகளை கூட சரியாக செய்ய முடியவில்லை. இதனால் தான் போராட வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம் என்றனர்.

சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்சார வாரிய அதிகாரிகள், சீரான மின்சாரம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில், உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். 

மேலும் செய்திகள்