ராமேசுவரம் தீவில் 4–வது நாளாக பலத்த சூறாவளி காற்று தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை

ராமேசுவரம் தீவில் தொடர்ந்து 4–வது நாளாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

Update: 2018-06-10 22:30 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம், தனுஷ்கோடி, எம்.ஆர்.சத்திரம், பாம்பன் உள்ளிட்ட ராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. நேற்று 4–வது நாளாக ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசியது.

இந்த காற்றின் காரணமாக சாலைகளில் மணல் அள்ளி தூற்றுவதால் வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து பலத்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தனுஷ்கோடி செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அனைத்து சுற்றுலா வாகனங்களும் கம்பிபாடு பகுதியுடன் நிறுத்தப்படுகிறது. வழக்கத்தை காட்டிலும் முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத அலைகள் சீறி எழுந்தன. பாம்பன் பாலத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்கப்படுகிறது. பலத்த காற்று வீசும்போது ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தானியங்கி சிக்னல் கிடைத்தவுடன் புறப்பட்டு சென்று வருகின்றன. இதனால் அனைத்து ரெயில்களும் ராமேசுவரம் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்