ரூ.200 கட்டணம் நிர்ணயம் செய்ததற்கு எதிர்ப்பு: வாரச்சந்தையில் கடைகள் போடாமல் வியாபாரிகள் போராட்டம்

பொன்மலை வாரச்சந்தையில் கடைகளுக்கு ரூ.200 கட்டணம் நிர்ணயம் செய்ததற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கடைகள் போடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2018-06-10 23:00 GMT
பொன்மலைப்பட்டி,

திருச்சி பொன்மலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் சந்தை மிகவும் பெயர் பெற்றது. ரெயில்வே இடத்தில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கடைகள் போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். இதேபோல கம்பிகேட்டில் தினசரி சந்தையும், பொன்மலை பகுதியில் தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்த நிலையில் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம், பொன்மலை பகுதியில் ரெயில்வே நிலங்களை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட்டது. சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் 6 மாதத்திற்கு ஒப்பந்தம் எடுத்துள்ளது. அந்த தனியார் நிறுவனம் தினசரி சந்தை, வாரச்சந்தையில் கடைகளுக்கு வாடகை கட்டணம் நிர்ணயித்துள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கும் கட்டணத்தை அறிவித்துள்ளது. அந்த வகையில் தரைக்கடைகளுக்கு ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, வியாபாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 8-ந்தேதி முதல் இந்த கட்டண முறை அமலுக்கு வந்ததாக தனியார் ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த கட்டண நிர்ணயத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 8-ந்தேதி கம்பிகேட்டில் தினசரி சந்தையில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். மேலும், திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில் கூடுதல் கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். கடைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் கூடுதலாக இருப்பதாகவும், கட்டணத்தை குறைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் எனவும், அதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கடைகளும் திறக்கப்படவில்லை. மேலும் கோரிக்கை தொடர்பாக வாரச்சந்தை நாளன்று போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இதற்காக நேற்று முன்தினம் இரவே வெளியூர் வியாபாரிகள் பொன்மலை சந்தைக்கு வந்தனர். அங்கு அவர்கள் இரவு சமைத்து சாப்பிட்டு தங்கினர். ஏற்கனவே அறிவித்தது போல், நேற்று பொன்மலை வாரச்சந்தையில் வியாபாரிகள் கடைகள் போடவில்லை. மேலும், வியாபாரிகளுக்கு ஆதரவாக அந்த பகுதியில் கடைகள் திறக்கப்படவில்லை. வியாபாரிகள் அனைவரும் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வியாபாரிகளின் போராட்டத்திற்கு அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர், பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர். அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான குமார் வியாபாரிகளிடம் பேசினார். அப்போது கோட்ட மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதேபோல அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றார். அவரும் ரெயில்வே அதிகாரிகளிடம் இது தொடர்பாக பேசுவதாக கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சீனிவாசனும் போராட்டத்தில் பங்கேற்றார். வாரச்சந்தையில் வியாபாரிகள் கடைகள் போடாததால் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வியாபாரிகள் இன்றும் (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க உள்ளதாக தெரிவித்தனர். கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தில் இன்று இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படு கிறது.

வியாபாரிகளின் போராட்டத்தால் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வியாபாரிகள், ரெயில்வே அதிகாரிகள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் ஆகியோர் தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்