கிருஷ்ணகிரி அணையில் தற்காலிக ஷட்டர் அகற்றும் பணி நிறைவடைந்தது

கிருஷ்ணகிரி அணையில் தற்காலிக ஷட்டர் அகற்றும் பணி நேற்று நிறைவடைந்தது.

Update: 2018-06-10 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணையின் பிரதான முதல் மதகில் உள்ள ஷட்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி உடைந்தது. இதனால் அந்த மதகு அகற்றப்பட்டு ரூ.30 லட்சத்தில் 12 அடி உயரத்தில் தற்காலிக மதகு அமைக்கப்பட்டது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரின் அளவு 52 அடியில் இருந்தது, 44 அடியாக குறைக்கப்பட்டது.

தற்போது தற்காலிக மதகை அகற்றி ரூ.3 கோடியில் 20 அடி உயரத்தில் புதிய ஷட்டர் அமைக்கப்படுகிறது. இதற்கான இரும்பு தளவாட பொருட்கள் திருச்சியில் இருந்து கொண்டு வரப்பட்டன. இதைத் தொடர்ந்து தற்காலிக ஷட்டரை அகற்றும் பணி கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இந்த பணியை தொழிலாளர்கள் 24 மணி நேரமும் விடாமல் மேற்கொண்டனர்.

இதில் தற்காலிக ஷட்டர் கியாஸ் வெல்டிங் மூலமாக உடைக்கப்பட்டு, ராட்சத கிரேன் மூலமாக அகற்றப்பட்டது. இந்த பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த பணிகள் சுமார் 25 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பணி முடிவடைந்த பிறகு கிருஷ்ணகிரி அணையில் 52 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படும். கிருஷ்ணகிரி அணையின் நேற்றைய நீர்மட்டம் 30.30 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 688 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 688 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

மேலும் செய்திகள்