தேக்கந்தோட்டம் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்: பொதுமக்கள் பீதி

பழனியை அடுத்த தேக்கந்தோட்டம் அருகே காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2018-06-10 23:00 GMT
பழனி,

பழனி வனப்பகுதியில் யானை, கடமான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. இவை உணவு, தண்ணீருக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம். அப்போது வன எல்லைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் வனத்துறையினர் அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டிவிடுவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேக்கந்தோட்டம் அருகே உள்ள புளியமரத்துசெட் விலங்கடியான் கோவில் அருகே யானைகள் கூட்டமாக வருகின்றன. சில நேரங்களில் ஒற்றை யானையும் அங்கு வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வனப்பகுதியில் கொசுக்கள் தொல்லை இருப்பதாலேயே யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன. மேலும் பகல் நேரத்திலேயே காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் தாங்கள் பீதியடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனச்சரகர் கணேஷ்ராமிடம் கேட்ட போது, கடந்த சில நாட்களாக பழனி பகுதியில் பெய்த மழை காரணமாக காட்டுயானைகள் பாலாறு அணை, ஜீரோ பாயிண்ட், விலங்கடியான் கோவில், சாய்பாபா கோவில் அருகில் வந்து செல்வதாக தகவல் வந்துள்ளது.

இதனால் அந்த பகுதிகளில் தற்போது கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் யானைகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், இரவு நேரத்தில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்

மேலும் செய்திகள்