சென்னையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதம்

பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்கள். பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-06-11 23:00 GMT
சென்னை,

தமிழகத்தில் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைபார்க்கிறார்கள். இப்போது நடைமுறையில் உள்ள சி.பி.எஸ். பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும். 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டும்.

சிறப்பு கால முறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் சென்னை எழிலகத்தில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.

இந்த உண்ணாவிரதத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், இரா.தாஸ், செ.முத்துசாமி, வெங்கடேசன், அன்பரசு, தாமோதரன், சுரேஷ், செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் மற்றும் மோசஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறுகையில் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவருவோம் என்றார். அவர் கூறியதை வலியுறுத்துகிறோம். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், முற்றுகை போராட்டம், கோட்டைநோக்கி போராட்டம் என்று பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே இந்த போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம். எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை இந்த உண்ணாவிரதம் நீடிக்கும் என்றார்.

மேலும் செய்திகள்