கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த தம்பதி துப்பாக்கியை காட்டி மிரட்டுவதாக பரபரப்பு புகார்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் தம்பதி வந்தனர். அப்போது அவர்கள், சாராயம் காய்ச்சுபவர்கள் தங்களை துப்பாக்கியை காட்டி மிரட்டுவதாக புகார் கூறினர்.

Update: 2018-06-11 22:00 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மனு கொடுக்க வந்த பொதுமக்களின் பை மற்றும் உடமைகளை சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பினர்.

கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒரு தம்பதியினரின் பையை சோதனை செய்ய தருமாறு போலீசார் கேட்டனர். ஆனால் அந்த தம்பதியினர் பையை கொடுக்க மறுத்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் மண்எண்ணெய் கேன் இருந்தது.

இதையடுத்து போலீசார் மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘செங்கம் தாலுகா தீத்தாண்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த காசிநாதன் (வயது 60), அவரது மனைவி அலமேலு (55) என்றும், அவர்களது மகன் ஏழுமலை 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரிடம் இருந்து செல்போன் வாங்கினார். இதையடுத்து ஊத்தங்கரை போலீசார் திருட்டு செல்போன் வைத்து உள்ளதாக கூறி ஏழுமலையை கைது செய்தனர்.

யாரிடம் இருந்து செல்போன் வாங்கினான் என்று எனது மகன் போலீசில் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் செல்போன் கொடுத்த நபர் மீதும் வழக்குப்பதிவு செய்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபரின் குடும்பத்தினர் எனது மகனை தாக்கினர். இதில் பயந்துபோன ஏழுமலை பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். பின்னர் நாங்களும் பெங்களூருவுக்கு சென்று விட்டோம்.

கடந்த ஜனவரி மாதம் ஊருக்கு வந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த நகை, பணம், முக்கிய ஆவணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் எங்கள் நிலத்தில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர்.

இதுகுறித்து தட்டி கேட்டால் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எங்களுக்கு நீதி வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்