மக்கள் விரோத திட்டங்கள் இல்லாத ஆட்சியை அமைப்போம் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேச்சு

மக்கள் விரோத திட்டங்கள் இல்லாத ஆட்சியை அமைப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

Update: 2018-06-11 22:30 GMT
திண்டுக்கல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், நேற்று திண்டுக்கல் சாத்தங்குடி நாடார் திருமண மண்டபத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலக்கோட்டை எம்.எல்.ஏ.வுமான தங்கத்துரை தலைமை தாங்கி பேசினார்.

கழக கொள்கை பரப்பு செயலாளரும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வுமான தங்கதமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் அனைவரும் மதங்களை கடந்து தமிழர்கள், இந்தியர்களாக இருக்கிறோம். முஸ்லிம் மதத்தை சிலர் தவறாக புரிந்து கொள்வதாக பெரியவர்கள் தெரிவித்தனர். இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை நிரூபிப்பதற்காகவே இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன்.

வாக்குவங்கியை மனதில் வைத்துக்கொண்டு இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதாக சிலர் அரசியல் பேசுகின்றனர். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முஸ்லிம் மக்களுக்கு தெரியும். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வழியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். மதவாத, சாதிய சக்திகளை அனுமதிக்கமாட்டோம்.

இதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ராமுத்தேவர், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சி கொடியேற்று விழா வடமதுரை காந்தி சிலை அருகே நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட டி.டி.வி.தினகரன் திறந்தவெளி வேனில் நின்றபடியே கட்சி கொடியை ஏற்றிவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தற்போது ஜெயலலிதாவின் பெயரை சொல்லி துரோகிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு பின் தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி கவிழும். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடிக்கும். இது மீத்தேன், ஸ்டெர்லைட், சேலம்- சென்னை 8 வழிச்சாலை போன்ற மக்கள் விரோத திட்டங்கள் இல்லாத ஆட்சியாகவும், சகோதரத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்தும் ஆட்சியாகவும் அமையும். மேலும் இளைஞர்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

இதனை தொடர்ந்து மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 405 பேர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நல்லசாமி, ஒன்றிய செயலாளர் சின்னாத்தேவர், நகர செயலாளர் சக்தி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்