நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அக்காள் - 3 தங்கைகள் தீக்குளிக்க முயற்சி

நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அக்காள் - 3 தங்கைகள் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-11 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் எப்போதும் போல போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்கள்.

திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றினார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவர்களை கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவர்கள் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சவுளூர் கூட்டு ரோட்டை சேர்ந்த ஜெயலட்சுமி மற்றும் அவருடைய தங்கைகள் செல்வி, ராணி, அறிவழகு என தெரிய வந்தது.

அவர்கள் அதிகாரிகளிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

சவுளூர் கூட்டு ரோடு அருகே சோலை நகரில் எங்களது தந்தையின் பூர்வீக சொத்து 3 ஏக்கர் உள்ளது. இந்த சொத்திற்கு நாங்கள் அனைவரும் வாரிசுகள் ஆவோம். எங்கள் சொத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் உரிமை கொண்டாடி எங்கள் நிலத்தில் விளைய கூடிய நெல்லை அத்துமீறி எடுக்கிறார்கள். மேலும் எங்களை மிரட்டி நெல்லையும், நிலத்தையும் அபகரித்து விட்டனர். மேலும் எங்களின் நிலத்தில் வீடு கட்ட அடித்தளம் அமைத்து கொட்டகை அமைத்து வருகிறார்கள். இது தொடர்பாக நாங்கள் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே எங்களின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அக்காள், தங்கைகள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்