ஒட்டு மொத்த சதியின் விளைவால் போராட்டங்கள் நடக்கிறது: தமிழக இளைஞர்கள் விழிப்போடு இருக்க வேண்டும்

தமிழகத்தில் ஒட்டுமொத்த சதியின் விளைவாகத் தான் போராட்டங்கள் நடக்கின்றன. இதனால் தமிழக இளைஞர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-06-11 23:00 GMT
நாகர்கோவில்,

இந்தியாவில் அதிக விபத்து மரணம் ஏற்படுவது தமிழகத்தில் தான். ஆனால் விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்கம் செய்தால் தடுக்கிறார்கள். இதற்காக போராட்டமும் நடக்கிறது. ஒட்டுமொத்த சதியின் விளைவு தான் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள். பயங்கரவாதிகளுக்கு துணையாக அன்னிய நாட்டு சக்திகள் செயல்படுகின்றன.

1970-ம் ஆண்டு வில்லுக்குறி கரிஞ்சான்கோட்டில் நக்சலைட்டுகள் தாக்குதலில் நானும் தாக்கப்பட்டேன். தமிழ் ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் என்ற பல முகமூடியுடன் பயங்கரவாதிகள் செயல்படுகிறார்கள். எனவே தமிழக இளைஞர்கள் விழிப்போடு இருக்க வேண்டும். பயங்கரவாதிகளை பிடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. தான் காரணம். பயங்கரவாதிகள் இருந்ததால் தான் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறினால் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படி எனில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாருக்கு மரண தண்டனை கொடுக்கப்படுமா? என இதுபோல 12 கேள்விகளை கேட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் பதில் வரவில்லை.

தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் நல்ல உறவு இருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக சட்டசபை நடப்பதாக தெரியவில்லை. நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பேசியதைத்தான் ரஜினி இப்போது பேசுகிறார். தமிழகத்தில் வலுவான தலைவர்கள் கிடையாது. எதிர்க்கட்சிக்கும் தற்போது வலுவான தலைவர் இல்லை.

தற்போதைய சூழலில் நடிகர்களும், இயக்குனர்களும் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் விஷயத்தை புரிந்து கொண்டு கூறினால் நல்லது. அமீர் போன்றவர் விஷயம் என்னவென்றே தெரியாமல் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

உலகில் 2014-2018 வரை உள்ள 4 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 55 சதவீதம் பேர் வங்கி கணக்கு தொடங்கி இருக்கிறார்கள். அதாவது நாட்டில் மொத்தம் 32 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதில் தமிழகத்தில் 90 லட்சம் பேர் தொடங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் வங்கிகளில் மொத்தம் ரூ.80 ஆயிரத்து 717 கோடி செலுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 1475.04 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் 24 கோடி ரூபே கார்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. விபத்து காப்பீடு திட்டத்தில் 13.55 கோடி பேர் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் 69.33 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை உருவாக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் வழங்கும் திட்டத்தின் மூலமாக எஸ்.சி. பிரிவினர் 8,321 பேருக்கும், எஸ்.டி. பிரிவினர் 2,514 பேருக்கும், 49,466 பெண்களுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 5,095 பேர் பயனடைந்துள்ளனர்.

முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 87 லட்சத்து 28 ஆயிரத்து 394 பேர் பயன்பெற்று உள்ளனர். 100 நாள் வேலை திட்டத்துக்கு அகில இந்திய அளவில் 55,704 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 2016-2017 மற்றும் 2018-2019 ஆண்டுகளில் ஒரு கோடியே 13 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கிராம சாலை திட்டத்தில் 2014-2018 பிப்ரவரி வரை 1,20,711 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 4,716 கி.மீ. வரை சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இளைஞர்களின் திறன் வளர்ப்பு அமைச்சகம் மூலம் 2020-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதற்காக 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை 20,34,631 பேர் பயிற்சி முடித்துள்ளனர். 4 கோடியே 20 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் தமிழகத்தில் 16,80,000 பேர் பயன் அடைந்திருக்கிறார்கள்.

2017-ம் ஆண்டுக்கு பிறகு அகில இந்திய அளவில் 68 லட்சத்து 24 ஆயிரத்து 83 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 66,345 வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 30 கோடியே 14 லட்சத்து 63 ஆயிரத்து 764 எல்.இ.டி. விளக்குகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.

இந்தியா முழுவதும் மண்வள அட்டை 10 கோடியே 67 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 70 லட்சம் பேருக்கு அளிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் இ-மார்க்கெட்டில் 585 தினசரி சந்தைகள் உள்ளன. தற்போது 471 சந்தைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் தமிழகம் சேரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்