காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மீது தாக்குதல் ஏன்? போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

தஞ்சையில், மோட்டார் சைக்கிளில் சென்றபோது காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்? என போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2018-06-11 22:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கலைஞர் நகரை சேர்ந்தவர் மணியரசன். காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரான இவர், தமிழ்த்தேசிய பேரியக்க தலைவரும் ஆவார். நேற்று முன்தினம் இரவு இவர், தஞ்சை கலைஞர் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு புறப்பட்டார்.

மோட்டார் சைக்கிளை சீனிவாசன் என்பவர் ஓட்டிவர, மணியரசன் பின்னால் அமர்ந்து வந்தார். தஞ்சை நட்சத்திர நகர் அருகே வந்த போது இவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள், திடீரென்று மணியரசனின் வலது கையை பிடித்து இழுத்தனர். இதில் நிலை தடுமாறிய மணியரசன், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

உடனே அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதை பார்த்தவுடன் 2 மர்ம நபர்களும் மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு வேகமாக புதிய பஸ் நிலையத்தை நோக்கி சென்று விட்டனர். காயம் அடைந்த மணியரசன், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் வந்து விசாரணை நடத்தினார். அப்போது மணியரசன் தனது கையில் வைத்திருந்த கைப்பையை அந்த மர்ம நபர்கள் பிடுங்கி சென்றதாக தெரிவித்தார். மேலும் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு, அந்த நபர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் குறித்த அடையாளம் தெரிகிறதா? என விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அப்போது மணியரசனை தாக்கி, அவரிடம் இருந்த கைப்பையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்களின் வண்டி எண்ணை பார்த்தனர். அதே வண்டி எண் மற்ற கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா? என்றும் பார்த்தனர்.

அப்போது தஞ்சை புதிய பஸ்நிலையம் அருகே ஆர்.ஆர் நகரில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் அந்த 2 மர்ம நபர்களும் செயினை பறிக்க முயற்சி செய்திருப்பது தெரிய வந்தது. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வண்டி எண்ணை பார்த்தனர். இதில் மணியரசனை தாக்கி கைப்பையை பிடுங்கிய வாகன எண்ணும், ஆர்.ஆர் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறிக்க முயற்சி செய்த வாலிபர்கள் சென்ற வாகன எண்ணும் ஒன்றாகவே இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மணியரசனை கொலை செய்யும் நோக்கோடு அந்த வாலிபர்கள் வரவில்லை என்பதும், மணியரசன் வைத்திருந்த கைப்பையை பிடுங்கசென்றபோது அவர் தாக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. மணியரசன் வைத்திருந்த கைப்பையில் ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, டேப் ரெக்கார்டர், ரூ.700 ஆகியவை இருந்துள்ளது. இது குறித்து தஞ்சை தெற்கு போலீசார், வழிப்பறி கொள்ளை என வழக்குப் பதிவு செய்து மணியரசனை தாக்கிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்