ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட 8 பேர் கைது 2 பேருக்கு அரிவாள் வெட்டு

செம்மஞ்சேரி பகுதியில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-06-12 00:28 GMT
சோழிங்கநல்லூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.

அப்போது அங்கு நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் போடப்பட்டு இருந்த நாற்காலிகளை அடித்து உடைத்தனர். தங்கள் கண்ணில் பட்டவர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டி ஓடவிட்டனர். சிலரை அரிவாளால் வெட்டினர். ஆனாலும் வெறி அடங்காத அந்த கும்பல், அங்கிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் லோடு ஆட்டோவின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

ஆயுதங்களுடன் மர்மகும்பல் ரகளையில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அலறி அடித்துக் கொண்டு ஓடி தங்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர்.

இது குறித்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசார் வருவதை கண்டதும், ரகளையில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியதில் ஜெயசீலன்(வயது 22), பிரபாகரன்(21) ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள், கையில் பயங்கர ஆயுதங்களுடன் சுனாமி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கும்பல், அனைவரையும் மிரட்டி ஓடவிட்டனர். அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்தனர்.

மேலும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி பெண்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மர்மகும்பல் கையில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து மர்மகும்பலை போலீசார் தேடி வந்தனர்.

அதில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டது, பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியைச்சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தி ரகளையில் ஈடுபட்டதாக பெரும்பாக்கம் எழில்நகரைச்சேர்ந்த சுந்தர்(22), நவீன்(19), கோபி(20), டில்லிகணேஷ்(20), கோட்டூர்புரத்தைச் சேர்ந்த அருண்(20), செம்மஞ்சேரி சுனாமிகுடியிருப்பைச் சேர்ந்த மனோஜ்(20), சுரேஷ் என்ற கொட்டசப்பி(19), தாம்பரம் பகுதியைச் சேர்ந்த விஷ்வா(19) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், மது அருந்தியும், கஞ்சா அடித்து விட்டும் போதையில் அனைவரும் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான ரவுடிகள் 8 பேர் மீதும் செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்