சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.36 லட்சம் தங்கம் பறிமுதல் 3 பேரிடம் விசாரணை

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-06-12 21:45 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த சீனிவாசன் (வயது 32) என்பவர் வந்தார். அவரை சோதனை செய்தபோது, உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள 359 கிராம் தங்கம் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதேபோல், மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த முத்து (36) என்பவர் வந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான 400 கிராம் தங்க கம்பிகள் கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த யூனுஸ் (40) என்பவர் வந்தார். இவரது உடைமைகளை சோதனை செய்தபோது விளையாட்டு பொருட்களில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான 400 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 3 பேரிடம் இருந்தும் ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்